
வாஷிங்டன், ஜூலை-6,
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பின் முன்னாள் நெருங்கிய நண்பரும் இன்னாள் விரோதியுமான இலோன் மாஸ்க், புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
அமெரிக்கா கட்சி (America Party) என அதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
“பண விரயமும் ஊழலும் நாட்டையே திவாலாக்கும் போது, நாம் ஜனநாயக முறையில் வாழவில்லை என்றே அர்த்தமாகும்; மாறாக, ‘ஒரே கட்சி முறையில்’ வாழ்கிறோம்”
“இன்று உங்களுக்கு புதிய விடியலைத் தருவதற்காக இந்த அமெரிக்கக் கட்சியை அறிவிக்கிறேன்” என்றார் அவர்.
Tesla, Space X மற்றும் X தளத்தின் உரிமையாளரும் உலக மகா கோடீஸ்வரருமான இலோன் மாஸ்க், சில மாதங்களுக்கு முன்பு வரை ட்ரம்பின் ‘அறிவிக்கப்படாத’ வலது கரமாக வலம் வந்தார்.
2024 அதிபர் தேர்தலின் போது ட்ரம்ப் பிரச்சாரங்களுக்கு கோடிக்கணக்கான டாலர்களை கொட்டி இறைத்து, கடைசியில் வெற்றிப் பெறவும் வைத்தார்.
ஆனால், அரசாங்க செயல்திறன் துறைக்குத் தலைவரானப் பிறகு, செலவினங்களைக் குறைப்பதற்கும் மத்திய அரசில் வேலைகளைக் குறைப்பதற்கும் எடுத்த முடிவில் அவருக்கும் ட்ரம்புக்கும் கருத்து வேறுபாடு தொடங்கியது.
பின்னர் சர்ச்சைக்குரிய வரி மசோதாவுக்கும் இலோன் மாஸ்க் கடும் எதிர்ப்புத் தெரித்தார்.
இதனால் இருவரும் வெளிப்படையாகவே X தளங்களில் மோதிக் கொண்டனர்.
ஆகக் கடைசியாக, இலோன் மாஸ்க்கின் நிறுவனங்களுக்கான அரசாங்க மானியங்களை நிறுத்துவேன் என்றும், தேவைப்பட்டால் சொந்த நாடான தென் ஆப்ரிக்காவுக்கே அவரை நாடு கடத்துவேன் என்றும் ட்ரம்ப் மிரட்டியிருந்தார்.
இந்நிலையில் மாஸ்க் கட்சி தொடங்கியுள்ளதால், ட்ரம்ப்பின் கோபம் மேலும் உச்சத்திற்கு சென்று அதிரடி நடவடிக்கையில் இறங்குவார் என ஐயுறப்படுகிறது.