
கோலாலம்பூர், ஜூலை-6,
தலைநகரில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு கட்டணம் செலுத்த போலி பண நோட்டுகளைப் பயன்படுத்திய சந்தேகத்தில், சீன நாட்டவர்கள் மூவர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 3 ஆம் தேதி போலீஸில் புகார் செய்யப்பட்டதை அடுத்து, 18 முதல் 47 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் கைதாகினர்.
அவர்களில் ஒருவர் 87 போலி 100 ரிங்கிட் நோட்டுகளைப் பயன்படுத்தி மொத்தம் RM8,700 மதிப்புள்ள ஹோட்டல் கட்டணத்தைச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
அம்மூன்று பெண்களும் கள்ள நோட்டு கும்பலின் முகவர்கள் என நம்பப்படுவதாக, டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுலிசிமி அஃபெண்டி சுலைமான் கூறினார்.
கள்ள நோட்டு பயன்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் 489B பிரிவின் கீழ் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.
விசாரணைகளுக்கு உதவுவதற்காக ஜூலை 9 வரை சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் 87 போலி RM100 நோட்டுகள், ஒரு RM50 நோட்டு, ஒரு RM20 நோட்டு, உடலில் குறுக்கே மாட்டும் 2
Louis Vuitton Paris பைகள், 18-03 என அடையாளம் காணப்பட்ட ஒரு அறைக்கான access அட்டை மற்றும் 3 iPhone-கள் ஆகியவை அடங்கும்.
பொது மக்களை பணத்தை கையாளும் போது விழிப்புடன் இருக்க வேண்டும்; போலி நாணயத்தைக் கண்டறிவதற்கான பேங்க் நெகாரா மலேசியாவின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் என சுலிசிமி வலியுறுத்தினார்.
கள்ள நோட்டு பெற்றதாக சந்தேகிப்பவர்கள், அந்த பண நோட்டுகளை புழக்கத்தில் விடக்கூடாது, மாறாக போலீஸ் அல்லது பேங்க் நெகாரா மலேசியாவிடம் புகாரளிக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.