
கோலாலம்பூர், ஜூலை 7 – கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு கீழ் இயங்கி வரும், கோட்டுமலை பிள்ளையார் ஆலயம் முழு கருங்கல்லில் மாற்றியமைக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார் அதன் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா. இன்று நடைப்பெற்ற அந்த திருப்பணிக்கான சிறப்பு பூஜையின் போது நடராஜா இத்தகவல்களை வழங்கினார்.
ஆலயத்தின் தற்போதைய தோற்றம் முழுமையாக மாற்றப்பட்டு புது பொலிவுடன் காட்சியளிக்கும் என்றும், திருப்பணிகள் முழுமையாக முடிக்க பெற்று இவ்வாண்டு நவம்பர் மாதத்திற்குள்ளாகவே கோவில் கும்பாபிஷேக விழாவும் நடைபெறும் என்றும் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் தான் ஸ்ரீ டத்தோ நடராஜா.
ஆலயத்திலிருக்கும் 32 சிமெண்ட் தூண்களும் அகற்றப்பட்டு முழு கருங்கல் தூண்கள் பொருத்தப்படும் என்றும், தற்போது அந்த அனைத்து தூண்களும் ஆலயத்திற்கு வந்து சேர்ந்து விட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சிறப்பு பூஜைக்கு மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார், ஆலய நிர்வாக உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக வந்து சிறப்பித்தனர்.
இன்று முதல் திருப்பணி வேளைகள் துவங்கியுள்ள நிலையில், ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு சற்று இடையூறு ஏற்பட்டாலும், அதனை பெருமனதுடன் பொறுத்தருள வேண்டுமென்றும், இதுநாள் வரை நன்கொடை வழங்கிய நல்லுள்ளங்களுக்கு தனது உளமார்ந்த நன்றியினையும், தான் ஸ்ரீ அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.
ஆலய கட்டுமானத்திற்கு நன்கொடை உதவிகள் வழங்க விரும்பும் அன்பர்கள் ஆலய நிர்வாகத்தினரைத் தொடர்புக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.