
கோலா கிராய், ஜூலை 8 – அண்மைய காலமாக, கிளந்தான் கம்போங் ஸ்லோ மெங்குவாங் (Kampung Slow Mengkuang) பகுதி மக்களுக்களின் பயிர்களைச் சேதப்படுத்தி, தொடர்ந்து அவர்களுக்கு தொந்தரவுகளை ஏற்படுத்தி வந்த காட்டு யானை ஒன்று, நேற்று மாநில வனவிலங்குத் துறையினரினால் வெற்றிகரமாக பிடிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2ஆம் தேதி, யானை தொந்தரவு குறித்து தமது துறையினருக்கு வந்த புகாரைத் தொடர்ந்து மேல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதென்று மாநில வனவிலங்கு இயக்குநர் முகமது ஹபிட்ஸ் ரோஹானி கூறியுள்ளார்.
யானையால் ஏற்பட்ட பயிர்கள் மற்றும் உடமைகள் சேதத்தால், பெரும் இழப்புகளைச் சந்தித்த அப்பகுதி மக்கள் தற்பொழுது ஓரளவு நிம்மதியாக இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
பகாங் லாஞ்சாங்கிலுள்ள கோலா கந்தா தேசிய யானை பாதுகாப்பு மையத்தின் உதவியுடன் யானை விரைவில் பாதுகாப்பான வாழ்விடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யானைகளை இடமாற்றம் செய்வது ஒரு நிரந்தர தீர்வாகாது என்றும் அதற்கு பதிலாக யானைகள் நுழையும் வழிகளில் நீல LED விளக்குகளை நிறுவுதல், விலங்குகளை ஈர்ப்பதைத் தவிர்க்க அடிமரங்களை அகற்றுதல் மற்றும் மின்சார வேலியை (SPEG) அமைப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியம் என்றும் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர்.