Latestமலேசியா

சிலாங்கூரின் FRIM வனப் பூங்காவுக்கு UNESCO-வின் உலகப் பாரம்பரியத் தள அங்கீகாரம்

புத்ராஜெயா, ஜூலை-13- மலேசிய வன ஆராய்ச்சிக் கழகத்தின் சிலாங்கூர் வனப் பூங்காவான FRIM, ஐநாவின் UNESCO அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ், பாரீசில் உள்ள UNESCO தலைமையகத்தில் ஜூலை 6 முதல் 16 வரை நடைபெறும் UNESCO உலகப் பாரம்பரியக் குழுவின் 47-ஆவது அமர்வில், 21 உறுப்பு நாடுகள் கூடி அம்முடிவை அறிவித்தன.

சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சு அதனை அறிக்கையொன்றில் உறுதிப்படுத்தியது. FRIM-மை உலகப் பாரம்பரியத் தளமாகச் சேர்க்கும் முயற்சி 2013-ஆம் ஆண்டு தொடங்கியது; 12 ஆண்டுகள் கழித்து அம்முயற்சி வெற்றியடைந்துள்ளது.

தனித்துவமான இந்த FRIM சிலாங்கூர் வனப் பூங்கா, மரங்களை மறுநடவு செய்து வெப்பமண்டல காட்டை மறுசீரமைக்கும் சீரிய முயற்சியாகும்.

இந்நிலையில் அதற்குக் கிடைத்துள்ள இந்த அனைத்துலக அங்கீகாரம், சிலாங்கூரின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக அதன் அந்தஸ்தை மேலும் உயர்த்துமென அமைச்சு நம்பிக்கைத் தெரிவித்தது.

அதுவும், 2025 சிலாங்கூருக்கு வருகைத் தாருங்கள் ஆண்டு, 2026 மலேசியாவுக்கு வருகைத் தாருங்கள் ஆண்டு பிரச்சார இயக்கங்களுக்கு, இது ஒரு பெரும் ஊக்குவிப்பாக அமையும்.

வெளிநாட்டு சுற்றுப்பயணிகளைக் கணிசமாகக் கவர்ந்து, பொருளாதாரத்தை உந்தச் செய்யுமென அமைச்சு கூறியது.

UNESCO-வின் இப்புதியப் பட்டியலின் மூலம் மலேசியா இப்போது 6 உலகப் பாரம்பரியத் தளங்களைக் கொண்டுள்ளது.

ஏற்கனவே கினாபாலு பூங்கா, கூனோங் முலு தேசியப் பூங்கா, மலாக்கா நீரிணையின் வரலாற்று நகரங்களான மலாக்கா மற்றும் ஜோர்ஜ்டவுன், லெங்கோங் பள்ளத்தாக்கு தொல்பொருள் பாரம்பரியம், குவா நியா தேசியப் பூங்கா தொல்பொருள் பாரம்பரியம் ஆகியவை அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!