
புத்ராஜெயா, ஜூலை-15- AI மூலம் எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக குடிநுழைவுத் துறை, NIISe எனப்படும் தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு முறையை வரும் அக்டோபரில் தொடங்க உள்ளது.
குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் சக்காரியா ஹாபான் அதனைத் தெரிவித்தார். வருகையாளர்கள் மற்றும் சுற்றுப் பயணிகள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து மலேசியாவிற்கு புறப்படுவதற்கு முன்பே, அவர்களைத் scan செய்ய இந்த நுழைவுக் கட்டுப்பாட்டு முறை பயன்படுத்தப்படும்.
அவர்கள் மலேசியாவிற்குள் நுழையத் தகுதியற்றவர்கள் என அதில் கண்டறியப்பட்டால், விமான நிறுவனம் அதுவாகவே அவர்கள் விமானத்தில் ஏறுவதைத் தடுத்து விடும்.
தற்போது நடைமுறையில் உள்ள தனித்தனி கணிணி அமைப்பு முறைகளில், போலீஸ் உள்ளிட்ட தரப்புகளிடமிருந்து தரவுகளைப் பெற முடியாது.
இப்போது, இப்புதிய முறையின் கீழ் அனைத்துத் தரவுகளையும் ஆக்கப்பூர்வமாக ஒருங்கிணைக்க முடியும் என சக்காரியா சொன்னார்.
இந்த NIISe முறையானது, சேவையளிப்பின் செயல்திறன் மற்றும் நெறிமுறையை மேம்படுத்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான குடிநுழைவுத் துறையின் முயற்சிகளில் ஒன்று என்றார் அவர்.
தொலைப்பேசிகளுக்கு அழைக்கவோ அல்லது நேரில் வரவோ அவசியமின்றி, கணினி அமைப்பு முறையிலேயே பொது மக்கள் கேள்விகளைக் கேட்டுத் தெளிவுப் பெறும் வகையில், Chatbot உரையாடல் வசதியும் அதில் இடம் பெற்றுள்ளது.
அதோடு, KLIA-வில் QR குறியீடு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் autogate அமைப்பும் இனி face recognition எனப்படும் முகத்தை வைத்து அடையாளம் காணும் சோதனைக்கு AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்.
நெறிமுறை தொடர்பான சிக்கல்களை மிகவும் திறம்பட நிவர்த்தி செய்வதற்கு இது உதவுமென சக்காரியா நம்பிக்கைத் தெரிவித்தார்.