
ஷா ஆலாம், ஜூலை-16- சிலாங்கூரில் vape அல்லது மின்னியல் சிகரெட்டுகளை விற்பவர்கள், அமுலாக்க நடவடிக்கைகளில் சிக்குவதைத் தவிர்க்க, அதன் விளம்பரங்களை முன்கூட்டியே அகற்றி விடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாநில ஊராட்சி மற்றும் சுற்றுலாத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் சுயீ லிம் (Ng Suee Lim) அவ்வாறு எச்சரித்துள்ளார்.
அமுலாக்க நடவடிக்கை தொடங்கும் தேதியை நிர்ணயிப்பது தொடர்பில், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடினுடன் (Jamaliah Jamaluddin) பேசப்படும் என்றார் அவர்.
சிலாங்கூரில் Vape விளம்பரங்களைத் தடைச் செய்யும் முடிவு மே மாதமே அறிவிக்கப்பட்டு விட்டதால், விளம்பரங்களை அகற்ற வியாபாரிகளுக்கு போதுமான கால அவகாசம் இருப்பதாக Ng கூறினார்.
வியாபாரிகளின் பொருளாதாரச் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும், அமுலாக்க நடவடிக்கைகள் தொடங்கும் போது கரிசனம் காட்டப்படாது. உத்தரவைப் பின்பற்றாதோருக்கு அபராதம் விதிக்கப்படும் என Ng தெரிவித்தார்.
சிலாங்கூரில் vape விற்பனையை மாநில அரசு இன்னும் முழுமையாகத் தடைச் செய்யவில்லை; பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டிகள் குறித்த ஆய்வுகள் இன்னமும் தொடருவதே அதற்குக் காரணம்.
அண்மையில் பெர்லிஸ், திரங்கானு, கெடா, பஹாங் ஆகிய மாநிலங்கள் vape விற்பனையை முழுமையாகத் தடைச் செய்தன.
ஜோகூரும் கிளந்தானும் 2016, 2015-ஆம் ஆண்டுகளிலேயே அத்தடையை கொண்டு வந்துவிட்டன.