
மலாக்கா, ஜூலை-16- மலாக்கா, புக்கிட் ரம்பாய் (Bukit Rambai) தொழிற்பேட்டையில் 2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 300 டன் அலுமினியக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கட்டி ஒவ்வொன்றும் 1 டன் எடையாகும். பயன்படுத்தப்பட்ட மின்னியல் பொருட்களை சட்டவிரோதமாகப் பதப்படுத்தி வந்த தொழிற்சாலையில் அவைக் கைப்பற்றப்பட்டன.
சுற்றுச் சூழல் துறையும் உள்நாட்டு வருவாய் வாரியமும் இணைந்து நேற்று காலை 11 மணிக்கு அந்த அதிரடிச் சோதனையை மேற்கொண்டன.
அதன் போது சீனா, வங்காளதேசம், மியன்மார் நாடுகளைச் சேர்ந்த 25 தொழிற்சாலை ஊழியர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
3 மாதங்களாக இயங்கி வரும் அந்த சட்டவிரோதத் தொழிற்சாலையின் குட்டு, உளவு நடவடிக்கையில் அம்பலமானதாக மலாக்கா போலீஸ் கூறியது.
மின்னணுக் கூறுகளை பிரித்து, அவற்றை உருக்கி அலுமினியக் கட்டிகளை உற்பத்தி செய்வதே அத்தொழிற்சாலையின் வேலையாகும்.
அதுவும் வெளிநாடுகளிலிருந்து மின்னணுக் கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்து, அலுமினியக் கட்டிகளாக அவற்றை உருமாற்றி சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அத்தொழிற்சாலை ஏற்றுமதி செய்து வந்துள்ளது.
தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட தரப்புகளை அடையாளம் காண தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.