
சிரம்பான், ஜூலை 16 – நேற்று சிரம்பான் தெர்மினல் 1 வணிக மையத்தில், நெகிரி செம்பிலான் செரியா மாஜூ சமூக நல இயக்கத்தின் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி ஒன்றிற்கு தலைமைத்தாங்கிய அந்த இயக்கத்தின் தலைவர் ஜேவி, இந்திய மாணவர்களின் கல்வி நலன் பற்றியும் அதன் சார்ந்த முன்னெடுப்பு திட்டங்கள் பற்றியும் மக்கள் முன்னிலையில் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
மேலும் இந்நிகழ்வில், தனது இயக்கத்தின் ஏற்பாட்டில், கடந்தாண்டு எஸ்.பி.எம் தேர்வில் 10 Aக்கள் பெற்ற 15 மாணவர்களுக்கு மடிக்கணினியும், அதற்கும் குறைந்த A க்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகையும் மற்றும் வசதி குறைந்த குடும்பப் பின்ணியைக் கொண்ட 30 கல்லூரி மாணவர்களைத் தத்தெடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வைத் தொடக்கி வைத்து உரையாற்றிய ராசாக் நாடாளுமன்ற உறுப்பினர், கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் எடுத்துரைத்த அதே வேளை நெகிரி செம்பிலான் தளபதி மன்றத்திற்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.
கடந்தாண்டு எஸ்.பி.எம் தேர்வில் நம்மின மாணவர்கள் மிகச் சிறந்த அடைவு நிலையைப் பெற்றுள்ளனர் என்றும் பெற்றோர்கள் அவர்களை சிறந்த தரமிக்க உயர்கல்விக்கூடங்களில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் உயர்க்கல்விக்கூட ஸ்கேம்களில் (SCAM) ஒருபோதும் மாணவர்கள் ஏமாந்து விடக்கூடாதென்றும் வலியுறுத்தியுள்ளார்.