
கோலாலம்பூர், ஜூலை-22- சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர்களான சம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங் இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படாததற்கு, போதிய ஆதாரங்கள் இல்லாததே காரணமாகும்.
சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மான் சாய்ட் (Azalina Othman Said) அதனைத் தெரிவித்தார்.
இருவர் மீதும் செய்யப்பட்ட புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி போலீஸ் அறிக்கை அனுப்பியது; ஆனால் அதனைப் பரிசீலித்த தேசிய சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், அவ்விருவரையும் நிதிமன்றத்தில் குற்றம் சாட்டும் அளவுக்கு ஆதாரங்கள் இல்லை என கண்டறிந்தது.
மக்களவையில் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் அசாலீனா அவ்வாறு கூறினார். என்ற போதிலும், எதிர்காலத்தில் போதிய ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் விசாரணை மீண்டும் தொடங்கலாம் என்றார் அவர்.
நூற்றுக்கணக்கில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டும் சம்ரி வினோத் மீதும் ஃபிர்டாவுஸ் வோங் மீதும் ஏன் இன்னும் நீதிமன்ற நடவடிக்கை இல்லை என, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் எழுப்பியக் கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
பல்வேறு சம்பவங்களில் இந்து மதத்தை இழிவுப்படுத்தியதாக சம்ரி வினோத்தும் இரகசிய மதமாற்றம் தொடர்பில் வீடியோக்களை வெளியிட்டு ஃபிர்டாவுஸ் வோங்கும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது தெரிந்ததே.