
ஜெருசலம், ஜூலை-30- வரும் செம்டம்பர் வாக்கில் சுதந்திர பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் பிரிட்டனின் திட்டத்தை, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு (Benjamin Netanyahu) கடுமையாகச் சாடியுள்ளார்.
காசா நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வராமலும், இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையைத் ஜெருசலம் தொடராமலும் போனால், பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்போம் என, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமெர் (Keir Starmer) அறிவித்துள்ளார்.
ஆனால், பிரிட்டனின் அவ்வறிவிப்பு பயங்கரவாதத்திற்கான ‘வெகுமதி’ என நெத்தன்யாஹூ குறிப்பிட்டார்; இது ஹமாஸ் போராளி அமைப்பை ஆதரிப்பதாகும் என்றார் அவர்.
எனவே, இஸ்ரேலிய எல்லையில் ஒரு ஜிஹாதி (Jihadis) நாடு அமையுமேயானால், அது எதிர்காலத்தில்
பிரிட்டனுக்கே அச்சுறுத்தலாக அமையுமென நெத்தன்யாஹு எச்சரித்தார்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் பிரிட்டனின் இம்முடிவானது, இஸ்ரேல் – பாலஸ்தீன நெருக்கடியில் அதன் நிலைப்பாடு பெருமளவில் மாறியிருப்பதை காட்டுகிறது.
ஆளும் தொழிலாளர் கட்சியில் கொடுக்கப்படும் அழுத்தங்களும், பிரான்ஸின் நடவடிக்கைகளும், இந்த ‘தொனி’ மாற்றத்திற்குக் காரணமாக கூறப்படுகிறது.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் அதே சமயம், அனைத்துக் கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டுமென்பதோடு, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, வருங்கால காசாவின் நிர்வாகத்தை விட்டு தள்ளியிருக்க வேண்டுமென்றும் ஸ்டாமெர் நிபந்தனை விதித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவை பிரிட்டன் அமைச்சரவை எடுப்பதற்கு முன்பே, ஸ்டாமெர், நெத்தன்யாஹுவை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசியதாகத் தெரிகிறது.