
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-4- எந்தவொரு நிறுவனத்திற்கோ, தனிநபருக்கோ அல்லது அரசு சாரா அமைப்புக்கோ NPK எனப்படும் சிறப்பு வாகன எண் பதிவுகளை போக்குவரத்து அமைச்சு தற்போது வெளியிடுவதில்லை.
மேற்கண்ட தரப்புகளுக்கு இலாபத்தை கொண்டு வரும் நோக்கிலான அந்நடவடிக்கையை அமைச்சு ஆதரிப்பதில்லை; 2022-ஆம் ஆண்டு அமைச்சரவை செய்த முடிவுக்கு ஏற்ப இது அமைவதாக போக்குவரத்து துணையமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபோல்லா ( Datuk Hasbi Habibollah) கூறினார்.
சிறப்பு வாகனப் பதிவு எண் பட்டைகளை வெளியிடுவதில் சாலைப் போக்குவரத்துத் துறை கடைபிடிக்கும் வழிகாட்டிகள் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
இவ்வேளையில், 2023-ஆம் ஆண்டிலிருந்து NPI எனப்படும் பிரத்தியேக வாகனப் பதிவு எண் பட்டை விற்பனை அறிமுகம் கண்டதிலிருந்து, 110 மில்லியன் ரிங்கிட் வருமானம் கிடைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
இந்த NPI எண் பட்டைகளை ஏலத்தில் எடுக்க JPJ-வின் JPJeBid செயலி வாயிலாக விண்ணப்பிக்க முடியும்; கிடைக்கும் வருமானம் மத்திய அரசின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியில் சேர்க்கப்படும் என்றார் அவர்.
அதன் ஒரு பகுதி, மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் துணையமைச்சர் சொன்னார்.