
கோலாம்பூர், ஆக 8 – கோலாலம்பூர் ஜாலான் பெட்டாலிங்கில் போலி பொருட்களை மறைத்து வைப்பதற்காக ஒரு கடையை வாடகைக்கு எடுப்பதற்கு முன்பு, அந்த வளாகத்தில் பல பகுதிகளாக தடுத்து ரகசிய கண்காணிப்பு கேமாராக்கள் வசதியுடன் மாற்றியமைத்த செயல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு வார காலம் உளவுத்துறை விசாரணை மேற்கொண்டதன் விளைவாக மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை கோலாலம்பூரில் உள்ள உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
அந்த இடத்தில் ஒவ்வொரு ‘பிரிவு’ அல்லது சிறிய அறையிலும் காலணிகள், jersiகள் மற்றும் கைக்கடிகாரங்கள் உட்பட பல்வேறு வகையான சந்தேகத்திற்குரிய போலி பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக கோலாலம்பூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் அமலாக்க பிரிவின் தலைமை அதிகாரி Mohd Shahran Mohd Arshad தெரிவித்தார்.
வர்த்தக முத்திரை உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட சோதனையில் ஏழு லட்சம் ரிங்கிட் மதிப்புடைய சுமார் 7,000 போலி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் போலி வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கைப்பைகள், beltகள், jersiகள் மற்றும் காலணிகள் போன்ற பொருட்களும் கண்டறியப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது தொழிலாளர்கள் என சந்தேகிக்கப்படும் 20 முதல் 50 வயதுக்குட்பட்ட கைது செய்யப்பட்ட நால்வர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.