
அலோர் ஸ்டார், ஆகஸ்ட்-22 – மலேசியா, வங்காளதேச மாணவர்களுக்கு Graduate Plus விசாக்களை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக, அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது, நாட்டில் உயர் கல்விக் கூடங்களில் பயின்று வரும் 10,000 வங்காளதேச மாணவர்கள் இங்கு உயர் திறன் கொண்ட வேலைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் ஒரு நடவடிக்கையாகும்.
இதை எப்படி அனுமதிக்கலாம் என, கெடா, ஜித்ரா சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான Haim Hilman Abdullah கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் மலேசியா வந்த வங்காளதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் Dr முஹமட் யூனுஸ் மற்றும் நம் உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாம்ரி அப்துல் காடிர் இருவருக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டுள்ளது
அதில், அவ்விண்ணப்பத்திற்கு மலேசியா கொள்கையளவில் இணங்கியுள்ளதாகவும், கொள்கை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இரு தரப்பினரும் சில சம்பிரதாயங்களை முடிக்க வேண்டும் எனக் கூறி, வங்காளதேச பத்திரிகைகள் விரிவாக செய்தி வெளியிட்டுள்ளன,
ஆனால் மலேசிய ஊடகங்களில் இது பற்றி எதுவுமே வெளிவராதது ஏன் என Haim Hilman ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
ஏற்கனவே நாட்டில் 1.9 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன; அப்படியிருக்க வெளிநாட்டினருக்கும் திறன் தேர்ச்சி வேலை வாய்ப்புகளைத் தாரை வார்த்தால், உள்நாட்டிநருக்கு அது எந்த வகையில் நியாயமாகும் என அவர் கேள்வி எழுப்பினார்.
இப்படிக் கேட்பதால், இது இனவிவகாரமோ புறக்கணிப்போ அல்ல; மாறாக தேச நலனை முன்னிறுத்திய ஒன்று என்றார் அவர்.
தற்போது, மற்ற நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக மாணவர்கள் மலேசியாவின் வேலைச் சந்தையில் நுழைய அனுமதிக்கப்பட்டாலும், வங்காளதேச மாணவர்கள் இதுவரை இந்த வாய்ப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.