
ஜோர்ஜ்டவுன், செப்டம்பர்-2 – திருட்டு மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்த குற்றத்தை கண்டும் காணாதது போலிருக்க, 9,000 ரிங்கிட்டை இலஞ்சமாகப் பெற்ற சந்தேகத்தில் ஒரு மூத்த அதிகாரி உட்பட 5 போலீஸ்காரர்கள் பினாங்கில் கைதாகியுள்ளனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் பினாங்குக் கிளையின் இயக்குநர் டத்தோ எஸ். கருணாநிதி அதனை உறுதிப்படுத்தினார்.
20 முதல் 40 வயதிலான அந்த ஐவரும் வாக்குமூலம் அளிக்க நேற்று MACC அலுவலகம் வந்தபோது கைதாகினர்.
வெள்ளிக்கிழமை செபராங் பிறையில் சோதனையொன்றின் போது அந்த ஐவரும் இலஞ்சத்தைக் கேட்டுப் பெற்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் பட்டறையின் உரிமையாளரிடமிருந்து ரொக்கமாக இலஞ்சப் பணம் கைமாறியதாக நம்பப்படுகிறது.
24 மணி நேரம் விசாரணைக்காக்க தடுத்து வைக்கப்பட்ட பிறகு MACC உத்தரவாதத்தின் பேரில் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.