
கோலாலம்பூர், செப் 2- அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக Mykad மூலம் வழங்கப்பட்ட 100 ரிங்கிட் உதவித் திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளில் நேற்றிரவு மணி 9.30 நிலவரப்படி நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் மலேசியர்கள் 60 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டனர்.
இரண்டு நாட்களுக்குள், 1.7 மில்லியனுக்கும் அதிகமான பெறுநர்கள் சாரா உதவியைப் பயன்படுத்தியதாகவும், மொத்தச் செலவு நாடு முழுவதும் 110 மில்லியன் ரிங்கிட்டை எட்டியதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று 20 விழுக்காட்டினர் கூடுதல் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த MyKasih அமைப்பு மேம்படுத்தப்பட்டது.
திறன் அதிகரித்த போதிலும், இந்த அமைப்பு இன்னும் பல இடங்களில் செயலாக்க நெரிசலை சந்தித்தது.
நகர்ப்புறங்களில் உள்ள முக்கிய பல்பொருள் அங்காடிகள் மதியம்
1 மணி முதல் 2.30 மணி வரை அதிகமானோர் Mykasih கணினி முறையை பயன்படுத்தியதால் உச்ச நேர நெரிசலைக் கண்டன.
நிலைமையை நிர்வகிக்க, களத்தில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்கவும் சில்லறை விற்பனையாளர்களுக்கு ஆதரவளிக்கவும் பெரிய பல்பொருள் அங்காடிகளில் MyKasih ஊழியர்கள் நிறுத்தப்பட்டனர் என்று நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
வார நாட்களில் காலை போன்ற நெரிசல் இல்லாத நேரங்களில் பொருட்களை வாங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
100 ரிங்கிட் சாரா credit இவ்வாண்டு டிசம்பர் 31 ஆம் தேதிவரை செல்லுபடியாகும்.
நாடு முழுவதும் 7,300க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் இதைப் பயன்படுத்தலாம்.
இது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 22 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்களின் MyKadஇல் 100 ரிங்கிட் உதவித் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.