
சிரம்பான், செப்டம்பர்-3- நெகிரி செம்பிலான், பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப் பள்ளியில் திறந்த வெளி மண்டபம் கட்டுவதற்கு YTL நிறுவனம் RM 450,000.00 நிதியை வழங்கியுள்ளது.
அங்கு பயிலும் 385 மாணவர்களின் பயன்பாட்டுக்காக அந்த திறந்த வெளி மண்டபத்தைக் கட்டும் முயற்சி கடந்த ஈராண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து அமைச்சருமான அந்தோனி லோக்கின் கவனத்திற்கு இவ்விஷயத்தை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் ஜம்புநாதன் கொண்டுச் சென்றார்.
அதன் பலனாக அந்தோணி லோக், YTL நிறுவனத்திடம் பேசி இந்த RM 450,000 நிதியுதவியைப் பெற்றுத் தந்துள்ளார். நிதி ஒப்படைப்பு அண்மையில் அப்பள்ளியில் நடந்தேறியது.
அவ்விரு தரப்புக்கும் நன்றித் தெரிவித்துக் கொண்ட அருள் குமார், கட்டுமான வேலைகளுக்கான அனைத்து அனுமதிகளும் முறையாகக் கிடைத்ததும், அடுத்த ஒரு வருடத்திற்குள் மண்டபம் கட்டி முடிக்கப்படும் என்றார்.
அரசாங்கம் அளிக்கும் உதவிகள் போக, இது போன்ற தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் நிதியுதவி மூலம் தமிழ்ப்பள்ளிகளின் நிலைமையை மேம்படுத்தி நமது மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை ஏற்படுத்தித் தர முடியுமென அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.