
காட்மண்டு, செப் 8- நேப்பாளத் தலைநகர் காட்மண்டுவில் (Kathmandu) அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தில் மரண எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதோடு காட்மண்டு மட்டுமின்றி சுற்றுலா மையமான பொக்ரா (Pokhara), உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கலவரம் பரவியுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசிற்குமிடையே மோதலில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
லஞ்ச ஊழலுக்கு எதிராகவும் முகநூல், இன்ஸ்டாகிரேம், whatsapp ,உட்ப பல்வேறு சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை எதிர்த்து அரசாங்கத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காட்மண்டுவில் ராணுவமும் பரவலாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலை சேதப்படுத்தினர். நாடாளுமன்ற கட்டிடத்திற்கு உள்ளேயும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டையும் மீறி நாடாளுமன்றத்திற்கு வெளியே நுழைந்தபோது அவர்களுக்கும் போலீசிற்குமிடையே மோதல் கடுமையாகியது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக தண்ணீர் அடிக்கப்பட்டதோடு , கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டக்களையும் போலீசார் பயன்படுத்தினர், பதிலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களும் மரக் கட்டைகள், நீர் போத்தல்கள் ஆகியவற்றை போலீஸ்காரர்கள் மீது எறிந்ததோடு அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் நாடாளுமன்ற வளாகத்தில் புகுந்தனர். அமைதியின்மையை தொடர்ந்து காட்மண்டு மாவட்ட நிர்வாக அலுவலகம் பல இடங்களில் ஊரடங்கை நீடித்தது.
அதிபர் இல்லம், துணையதிபர் இல்லம் மற்றும் அமைச்சர்கள் இல்லம் இருக்கும் பகுதிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.மதியம் 12.30 மணி முதல் இரவு 10 மணிவரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தலைமை அதிகாரி Chhabilal Rijal தெரிவித்தார்.