
டோஹா, செப்டம்பர்-10 – ஹமாஸ் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நேற்று கட்டார் தலைநகர் டோஹாவில் தாக்குதல் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆங்காங்ஙே பெரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதோடு, வானில் கரும்புகை கிளம்பியதாக அந்நாட்டு தொலைக்காட்சிகள் தெரிவித்தன.
ஹமாஸ் அரசியல் செயலக உறுப்பினர்கள் வசிக்கும் குடியிருப்புகள் அதில் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தை குழுவினரும் குறிவைக்கப்பட்டதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
அத்தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த கட்டார், இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயல் என சாடியது.
ஈரானும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் டோஹாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம், தனது குடிமக்கள் பாதுகாப்பாக உள்ளே தங்குமாறு அறிவுறுத்தியது.
இதற்கிடையில், காசா நகரிலும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், பொது மக்களை வெளியேறுமாறு எச்சரித்து, விரைவில் தரை நடவடிக்கை தொடங்கப்போவதாக பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு தெரிவித்துள்ளார்.
2023 முதல் தற்போது வரை நடக்கும் போருக்கு ஹமாஸ் தலைவர்களே பொறுப்பாளிகள் என இஸ்ரேல் இராணுவம் கூறி வருகிறது.