
கோலாலாம்பூர், செப்டம்பர்-11 – முழு தகுதியிருந்தும் அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் இந்திய – சீன மாணவர்களுக்கு உரியப் பட்டப்படிப்புகள் வழங்கப்படாமல் போகும் சம்பவங்கள் ஆண்டுதோறும் அரங்கேறி வருகின்றன.
இதற்கு தீர்வை ஏற்படுத்த, அரசாங்கத்திலிருக்கும் DAP என்ன செய்தது என ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் தினாளன் டி. ராஜகோபாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனர்களிடம் பேசும் போது, மேலும் அதிகமான கல்வி வாய்ப்புகளுக்குப் போராடுவோம் என வாக்குறுதி அளித்த DAP, இந்தியர்களைக் கண்டதும் – பல்கலைக் கழகங்களில் நியாயமான இட ஒக்துக்கீட்டைப் பெற்றுத் தருவதாக நம்பிக்கையூட்டியது.
ஆனால் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததும், அந்த வாக்குறுதிகள் காற்றில் பறந்து விட்டன; மாறாக இன்னமும் எதிர்கட்சி போலவே அது நடந்துக்கொள்வதாக தினாளன் சாடினார்.
மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் பழிபோடுவதிலும் காட்டும் அக்கறையை, அரசாங்கத்தில் இருக்கும் இடத்தை வைத்து இந்திய சீன மாணவர்களின் பல்கலைக் கழக நுழைவு விஷயத்திற்கு தீர்வுக் காண்பதில் காட்ட மறுக்கிறது.
மிகச் சிறந்த மாணவர்கள் கல்வி வாய்ப்பில் விடுபடுவதால் மக்கள் வெறுப்பில் உள்ளனர்; DAP-யோ பழைய பஞ்சாங்கத்தைப் பாடிகொண்டிருக்கின்றது.
ஆனால் அடிப்படை உரிமையான கல்வி வாய்ப்பில் இந்திய சீன மாணவர்கள் தொடர்ந்து புறக்கணிப்படுகின்றனர் என்பதே நிதர்சனம் என, ஃபேஸ்புக் பதிவில் தினாளன் சொன்னார்.
மிகச் சிறந்தத் தேர்ச்சிப் பெற்று மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த ஏராளமான மாணவர்களுக்கு, வேறு படிப்புகள் வழங்கப்பட்டதாக ம.இ.கா புகார்களைப் பெற்று வருவதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.