
கோலாலாம்பூர், செப்டம்பர்-12 – தனியார் வாகனங்களில் செல்லும் அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பு வார்பட்டை அணிய வேண்டுமென்பது விரைவில் கட்டாயமாக்கப்படும்.
இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சாலைப் போக்குவரத்து துறையான JPJ-வின் தலைமை இயக்குநர் டத்தோ Aedy Fadly Ramli தெரிவித்தார்.
தற்போதைக்கு இந்த வார்ப்பட்டை அணிவதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் சொன்னார்.
அதனொரு பகுதியாகத் தான் “Klik Sebelum Gerak” எனும் பிரச்சார இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது;
அதாவது வாகனத்தை எடுப்பதற்கு முன் பயணிகள் அனைவரும் பாதுகாப்பு வார்பட்டை அணிவதை அது ஊக்குவிக்கிறது.
1978-ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், பாதுகாப்பு வார்பட்டை அணியாத குற்றத்திற்கு அதிகபட்சம் RM300 அபராதம் விதிக்கப்படலாம் என்பதையும் Aedy Fadly சுட்டிக் காட்டினார்.
MIROS எனப்படும் மலேசிய சாலை பாதுகாப்பு ஆராய்சிக் கழகத்தின் ஆய்வின் படி, பாதுகாப்பு வார்பட்டை பயன்படுத்துவது, விபத்தில் உயிரிழப்பு அபாயத்தை 50% வரை குறைப்பது தெரிய வந்துள்ளது.
2020-க்கு பிந்தைய பேருந்துகளில் பாதுகாப்பு வார்பட்டை அமுலாக்கம் கடந்த ஜூலை 1 முதல் நடைமுறையில் உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.