
கோலாலாம்பூர், செப்டம்பர்-12 – மலேசியா பல்லின மக்களைக் கொண்ட நாடு என்பதால், சில நாடாளுமன்றத் தொகுதிகளில் மலாய்க்காரர் அல்லாதவர்களே ‘கிங் மேக்கர்’ அதாவது வெற்றித் தோல்வியைத் தீர்மானிக்கும் துருப்புச் சீட்டு ஆவர்.
இந்த நிதர்சனத்தை பாஸ் கட்சியினர் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ற வகையில் நடக்க வேண்டுமென, பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு உறுப்பினர்களுக்கு நினைவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்லாம் அனைவருக்கும் நியாயமானது என்பதை முஸ்லீம் அல்லாத வாக்காளர்களுக்குப் புரிய வைப்பது பெரும் சவால் என்பதை, அப்பிரிவின் தலைவர் Afnan Hamimi Taib Azamudden ஒப்புக் கொண்டார்.
இஸ்லாத்தை மையப்படுத்தியத் தலைமைத்துவத்தின் கீழ் யாரும் அடக்குமுறை செய்யப்படமாட்டார்கள்; அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை மலாய்க்காரர் அல்லாதோரிடையே விதைக்க வேண்டும் என்றார் அவர்.
அவ்வகையில் பாஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்கள், தாய்மொழிப் பள்ளிகளுக்கு நிதி வழங்கி, முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களையும் காப்பதாக, பாஸ் இளைஞர் பிரிவின் ஆண்டு பேராளர் மாநாட்டை இன்று காலை தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் சொன்னார்.
ஆனால், மலாய்க்காரர் அல்லாதோர் மீது அச்சத்தை ஏற்படுத்தும் தீய நோக்கில் “இஸ்லாத்தின் எதிரிகள்” விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள் என அவர் குற்றம் சாட்டினார்.
அதனை முறியடிக்கும் விதமாக, அனைத்து இனங்களுக்கும் நலத்திட்டங்களை உருவாக்குவதல், கலந்துரையாடல்கள் நடத்துதல், பண்டிகை கால விசாரிப்புகள் போன்ற நடவடிக்கைகள் வாயிலாக பாஸ் கட்சியினர், முஸ்லீம் அல்லாதோரிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
“வாக்குகள் மட்டுமல்ல, அவர்களின் நம்பிக்கையும் எங்களுக்கு தேவை” என்றார் அவர்.