
கோலாலாம்பூர், அக்டோபர்-7,
சமூக ஊடகங்களில் உணர்ச்சியைத் தூண்டி விட்டது, அவமதிப்பு அல்லது அச்சுறுத்தல்கள் அடங்கிய கருத்துகளைப் பதிவுச் செய்தது தொடர்பாக, 7 ஆடவர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
அவற்றில் பெரும்பாலானவை நாட்டுத் தலைவர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டவை என, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
டிக் டோக் மற்றும் ஃபேஸ்புக்கில் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 5 வரை அக்குற்றங்கள் புரியப்பட்டுள்ளன.
அரசாங்கத்தையும் நாட்டுத் தலைவர்களையும் குறிவைத்து டிக் டோக்கில் பதிவுகள் அல்லது கருத்துகள் பதிவிடப்பட்டதாக 6 புகார்களும், பெட்ரோல் மானியம் தொடர்பில் ஒரு புகாரும் பதிவாகியுள்ளது.
தேச நிந்தனை அம்சங்கள், மற்றும் சில தரப்புக்கு எதிரான அவதூறு பதிவுகளும் அவற்றிலடங்கும்.
இதையடுத்து மேல் விசாரணைகளுக்கு உதவுவதற்காக ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த எழுவரில் 40 வயதுடைய நபருக்கு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான 19 குற்றப்பதிவுகள் இருப்பதும், 60 வயதுடைய மற்றொரு சந்தேக நபர் 2012 அமைதிப் பேரணிச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டதாக, குமார் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி மக்களைத் தூண்டி விடுவது, அச்சுறுத்தல்கள் அல்லது அவமதிப்புகள் அல்லது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது போன்ற செயல்கள் கூடாது என்றும் குமார் பொது மக்களை எச்சரித்தார்.
இதுபோன்ற செயல்களைச் செய்யும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.