
கூச்சிங், அக்டோபர்-14,
மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களில் மதுபானங்கள் பரிமாறுவதை நிறுத்தக் கோரிய பாஸ் நாடாளுமன்ற உறுப்பினரை, GPS எனப்படும் சரவாக் கட்சிகளின் கூட்டமைப்புச் சேர்ந்த மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கடுமையாக சாடியுள்ளார்.
தேசிய விமான நிறுவனத்தை தனது மத அரசியலுக்குள் இழுக்க வேண்டாம் என, உலு சிலாங்கூர் எம்.பி. ஹஸ்னிசான் ஹருணை (Hasnizan Harun), பாவாங் அசான் (Bawang Assan) சட்டமன்ற உறுப்பினர் வோங் சூன் கோ கேட்டுக் கொண்டார்.
ஹஸ்னிசானின் பேச்சு அறியாமை மற்றும் குறுகிய பார்வை கொண்டது என வோங் சாடினார்.
மலேசியா ஏர்லைன்ஸ், உலகம் முழுவதும் பல்வேறு மதப் பின்னணியைச் சேர்ந்த பயணிகளுக்கு சேவையை வழங்குகிறது; இந்நிலையில், மதுவைத் தடை செய்வது அதன் பயணிகளின் எண்ணிக்கையைக் குறைத்து விடுமென, 7 முறை சட்டமன்ற உறுப்பினரான அவர் சொன்னார்.
ஹஸ்னிசானின் பேச்சு, அவருக்கும் பாஸ் கட்சிக்குமே அவமானம் என்றும், அந்த இஸ்லாமியக் கட்சி உண்மையிலேயே நாட்டை ஆள விரும்பினால் அத்தகைய நிலைப்பாடுகளை கைவிட வேண்டும் என்றும் வோங் கூறினார்.
மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களில் மதுபானங்களை வழங்குவது இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், முஸ்லீம் விமானப் பணியாளர்களை அது சங்கடமான நிலையில் வைப்பதாகவும் ஹஸ்னிசான் நேற்று கூறியிருந்தார்.
பயணிகளும் இதனால் சங்கடப்படுகின்றனர் எனக் கூறிய அவர், தனது அப்பரிந்துரை யாருடைய உரிமைகளையும் கட்டுப்படுத்துவது அல்ல, மாறாக பெரும்பான்மையினரின் மத உணர்வுகளை மதிப்பதற்கே என்றார்