
செப்பாங், அக்டோபர்-17,
KLIA விமான நிலையத்தின் குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் fast track சிறப்புப் பாதை வழியாக வெளிநாட்டினரைக் கடத்த ஓர் உள்ளூர் பெண் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
34 வயது சந்தேக நபர் அங்குள்ள ஒரு ஹோட்டலில் மேலாளராக வேலைச் செய்வதாக, AKPS எனப்படும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர், சிறப்புப் பாதை நுழைவுச் சீட்டைப் பயன்படுத்தி 6 இந்தோனேசியர்களை குடிநுழைவுச் சோதனைச் சாவடிக்குள் அழைத்து வர முயன்றார்.
வெற்றிகரமாக அழைத்து வரும் ஒவ்வொரு பயணிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அப்பெண் லஞ்சமாகப் பெற்றதாக நம்பப்படுவதாக அவ்வறிக்கைக் கூறியது.
இந்தோனேசியா, சீனா, வனுவாத்து, கம்போடியா மற்றும் லாவோஸைச் சேர்ந்த வெளிநாட்டினரை உள்ளடக்கிய இந்நடவடிக்கை ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வந்ததாகவும், இதில் பல ஹோட்டல் ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
தனது முதலாளிக்கு தெரியாமல் மற்றும் அவர் விடுமுறையில் சென்ற நேரங்களில் அம்மாது இந்தச் செயலைச் செய்ததாக நம்பப்படுகிறது.
சந்தேக நபர் தற்போது ஆள்கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அதே சமயம், 6 இந்தோனேசியர்கள் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் புத்ராஜெயா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.