
பாரீஸ், அக்டோபர்-23- பிரான்ஸில் மாவீரன் நெப்போலியன் காலத்து வைரங்கள் உள்ளிட்ட நகைகள் கொள்ளையிடப்பட்டதற்கு, பழையதும் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டதுமான CCTV கேமராக்களே முக்கியக் காரணமென கண்டறியப்பட்டுள்ளது.
தலைநகர் பாரீஸில் உள்ளது தான் உலகப் புகழ்பெற்ற லூவ்ர் (Louvre) அருங்காட்சியகமாகும்.
இந்நிலையில் ஞாயிறன்று அங்கு திருடர்கள் சுமார் 102 மில்லியன் டாலர் அதாவது மலேசிய ரிங்கிட்டுக்கு RM450 மில்லியன் மதிப்புள்ள பிரான்ஸ் அரச ஆபரணங்களை பட்டப் பகலிலேயே கொள்ளையிட்டுச் சென்றனர்.
19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரீடங்கள், சங்கிலிகள், காதணிகள் உள்ளிட்ட 8 நகைகள் களவுப் போயின.
அருங்காட்சியகத்தின் CCTV கேமராக்கள் மாடி பால்கனி மற்றும் ஜன்னல் பகுதியை பதிவுச் செய்யவில்லை; ஆனால், திருடர்கள் கிரேன் லாரியைப் பயன்படுத்தி அந்த இடத்துக்கு சென்றே கண்ணாடியை வெட்டி உள்ளே நுழைந்துள்ளனர்.
இப்படி CCTV பாதுகாப்பு அமைப்பு பழமையானதும் முழுமையற்றதுமாக இருந்துள்ளதால் 4 நிமிடங்களுக்குள் நடந்த இந்த திருட்டு யாரும் கவனிக்காமலேயே முடிந்துள்ளது.
1911-ஆம் ஆண்டு மோனாலிசா ஓவியம் திருடப்பட்ட பிறகு லூவ்ர் அருங்காட்சியகத்தில் மிகப் பெரிய கொள்ளைச் சம்பவமாக இது திகழ்கிறது.
பிரான்ஸ் நாட்டின் கலைப் பொருட்களை கொள்ளைக் கும்பல்கள் குறிவைப்பது அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற பாதுகாப்புக் குறைபாடுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
இதையடுத்து அரசு தேசிய பாரம்பரிய தளங்களின் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய பிரான்ஸ் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
திருட்டுக்குப் பிறகு தற்போது லூவ்ர் அருங்காட்சியகம் கடுமையான பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.