
ரவாங், அக்டோபர்-28,
சிலாங்கூர், ரவாங்கில் நிகழ்ந்த மனதை நெகிழ்ச்சியுறச் செய்யும் ஒரு சம்பவத்தில், எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த ஓர் இளைஞர், தனது தம்பிக்கு கடைசிப் பரிசாக ஒரு விவேகக் கைப்பேசியை அளித்தார்.
இதுநாள் வரை, பெற்றோரைப் போலவே தனது சுக துக்கங்களில் பங்குகொண்ட தம்பிக்கு, சிறு மகிழ்ச்சி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் Muhammad Zafran Hadi Mohd Fitrahaizul அந்த பரிசை வழங்கினார்.
மருத்துவமனைக் கட்டிலில் படுத்தப் படுக்கையாக இருக்கும் அண்ணன், போர்வைக்கு அடியிலிருந்து பரிசுப் பொட்டலத்தை எடுத்து, தம்பி Aidil Haziq-கிற்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.
iPhone-னைக் கண்டு நெகிழ்ந்துபோன Aidil, ஆணந்தக் கண்ணீரில் அண்ணனின் கையிலும், நெற்றியிலும் முத்தமிட்டு தனது நன்றியை வெளிப்படுத்தினார்.
தனது மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த அந்த தருணத்தை பதிவுசெய்து Zafran தனது டிக்டோக் பக்கத்தில் வீடியோவாக பதிவேற்றியிருந்தார்.
வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பலரும் கண்ணீருடன் அந்த சகோதர பாசத்தை பாராட்டினர்.
எனினும், புற்றுநோயுடனான Zafran-னின் போராட்டம் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி ஓய்ந்தது…அன்று அதிகாலை அவர் மரணமடைந்தார்.
அண்ணனின் நினைவாக இந்தக் கைப்பேசி தம்பி Aidil-லின் மனதில் காலத்திற்கும் நிலைத்திருக்குமென, குடும்பத்தார் சோகத்துடன் கூறினர்.
வாழ்க்கையின் கடைசி தருணங்களிலும் அன்பு எவ்வளவு வலிமையானது என்பதை இச்சம்பவம் நமக்கெல்லாம் நினைவூட்டுகிறது.



