
கோலாலம்பூர், அக்டோபர் 30 –
‘Fashion’ விற்பனை நிறுவனமான ‘Padini Holdings’ , ‘body shaming’, அதாவது உருவ கேலி செய்யும் காணொளியைத் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகின்றது.
அழகிய ஆடைகளின் அளவிற்கு ஏற்றவாறு உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்ற பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்ட அக்காணொளி பலரின் கோபத்தை தூண்டியதோடு மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டது.
எதிர்ப்புகளுக்கு பின்னர், அந்நிறுவனம் அந்த வீடியோவை அனைத்துச் சமூக ஊடக பக்கங்களிலிருந்தும் நீக்கி, பொதுமக்களிடம் மன்னிப்பு கோரிய அறிக்கையொன்றை வெளியிட்டது.
அதில், தாங்கள் வெளியிட்ட காணொளியினால் ஏதேனும் மன வருத்தம் ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், இதன் பின்னர் சமூகத்தின் கருத்துக்களை கவனமாகக் கேட்டறிந்து , பாடம் கற்றுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு அந்நிறுவனம் போதிய நடவடிக்கைகளை எடுக்குமென்று உறுதியளித்துள்ளது.



