
லங்காவி, நவம்பர்-2,
கெடா, லங்காவியில் நேற்று நடைபெற்ற 2025 Ironman Malaysia போட்டியில், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் போட்ட கடின உழைப்பு வீண்போகவில்லை.
13 மணி நேரங்களுக்குள் போட்டியை முடித்து மூவார் தொகுதி மக்களுக்கு 1 மில்லியன் ரிங்கிட் சமூக நன்கொடையை அவர் வென்றுள்ளார்.
3.8 கிலோ மீட்டர் தூர நீச்சல், 180 கிலோ மீட்டர் தூர சைக்கிளோட்டம், 42.2 கிலோ மீட்டர் தூர மரத்தோன் ஓட்டம் ஆகிய 3 பிரிவுகளை உள்ளடக்கிய இந்த Ironman போட்டியை, சையிட் சாடிக் 12 மணி 22 நிமிடங்கள் 18 வினாடிகளில் முடித்தார்.
இதே கடந்தாண்டு போட்டியில் சையிட் சாடிக் 13 மணி 13 நிமிடங்கள் பதிவுச் செய்தார்.
இதன் மூலம், RM1 மில்லியன் சன்மானத்திற்கு 13 நிமிடங்களுக்குள் போட்டியை முடித்தாக வேண்டுமென, உள்ளூர் ஃபேஷன் நிறுவனமான Prima Valet வைத்த நிபந்தனையை அவர் பூர்த்திச் செய்தார்.
இலவச
மடிக்கணினிகள், உணவு வங்கித் திட்டம், மற்றும் பெருநாள் புத்தாடைகளை இந்த சன்மானம் உள்ளடக்கியுள்ளது.
Pelangi Beach Resort & Spa-வில் போட்டியை நிறைவுச் செய்த போது ஆனந்த கண்ணீர் விட்ட சையிட் சாடிக்கை, அவரின் பெற்றோர் ஆரத்தழுவிக் கொண்டனர்.
ஆனால் இது அவருக்கு சாதாரணமாக கிடைத்து விடவில்லை.
போட்டி நெடுகிலும் 10-க்கும் மேற்பட்ட தடவை தசைப்பிடிப்புக்கு ஆளாகி, பல முறை வாந்தி எடுத்து, கழிவறைக்கும் பல தடவை போக வேண்டியிருந்தது.
என்ற போதிலும், தனது சிந்தனை முழுக்க மூவார் மக்களே இருந்ததால், அவர்களை ஏமாற்றி விடக் கூடாது என்பதற்காக தைரியத்தையும் தெம்பையும் வளர்த்துக் கொண்டு போட்டியை முடித்ததாக சையிட் சாடிக் சொன்னார்.



