
கோத்தா திங்கி, நவம்பர் 17 – ஜொகூர் மாநிலத்தில் உள்ள சுங்கை ரெங்கிட்–கோத்தா திங்கி சாலையில், நேற்று பிற்பகல் நடந்த மூன்று வாகன விபத்தில் ஒரு தம்பதியினர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர்களின் ஆறு மாத குழந்தை காயங்களுடன் உயிர் தப்பியது.
இவ்விபத்தில் காரை ஓட்டி வந்த 24 வயதான கணவன் மற்றும் 28 வயதான மனைவி ஆகியோர் கடுமையான தலைகாயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
ஆனால் அந்த 6 மாதக் குழந்தை, குழந்தைகள் இருக்கையில் அமர்ந்திருந்தபோதும், தலையில் காயம் ஏற்பட்டு கோத்தா திங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
தம்பதியர் வந்த மைவி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வரும் பாதையில் சென்று, லாரி ஒன்றுடன் மோதியதைத் தொடர்ந்து, பின்னர் ஒரு டொயோட்டா வியோஸ் வாகனத்தையும் மோதியது.
இந்நிலையில் 47 வயதான லாரி ஓட்டுனருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. அதே வேளை, 46 வயதான வியோஸ் கார் ஓட்டுனர் எவ்விதகாயங்களுமின்றி உயிர் தப்பினார்.



