
டெங்கில், நவம்பர்-25 – சிலாங்கூர், டெங்கில், ஜாலான் பந்திங் – பத்து லாப்பான் சாலையோரத்தில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில், கிரிமினல் குற்றவாளி என நம்பப்படும் ஒருவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
புக்கிட் அமான் கடும் குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழு நேற்றிரவு 8.10 மணிக்கு டெங்கில் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெரோடுவா மைவி காரில் பயணம் செய்த ஆடவரை கண்டனர்.
அப்போது, பந்திங், டெங்கில் மற்றும் செப்பாங் பகுதிகளில் கொள்ளை சம்பவங்களைக் கண்டறியும் ரோந்துபணியில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாக, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
போலீஸார் நிறுத்த முயன்றபோது, சந்தேக நபர் திடீரென போலீஸை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதனால் தற்காப்புக்காக போலீஸாரும் திருப்பிச் சுட்டனர்.
இதில் அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
தொடக்கக் கட்ட விசாரணையில் அந்நபர் உள்ளூர்வாசியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது; ஆனால் எந்த அடையாள ஆவணமும் கிடைக்கவில்லை என குமார் தெரிவித்தார்.
கொல்லப்பட்டவரின் காரை சோதனை செய்தபோது ஒரு Colt 45 துப்பாக்கியும், போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 7 பிளாஸ்டிக் பேக்கேட்டுகள் மற்றும் 3 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.



