
சிரம்பான், டிசம்பர்-11 – நவம்பர் – டிசம்பர் மாதங்களில் 4 சிறார்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதை, தொழிற்சாலை ஊழியர் ஒருவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
7,8 மற்றும் 9 வயதுடைய 3 சிறார்களுக்கு உடல் ரீதியாகவும், 12 வயதுடைய ஒரு சிறாருக்கு உடல் ரீதி அல்லாத பாலியல் தொல்லையும் கொடுத்ததாக,
32 வயது Azizuan Arsemi, மீது 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
நவம்பர் 21 மற்றும் டிசம்பர் 3-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், சிரம்பானில் Taman Senawang Indah, Taman Jasmin ஆகிய இடங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களில் அவர் அக்குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2017 சிறார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடல் ரீதியான பாலியல் தொல்லைகளுக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
அதுவே உடல் ரீதி அல்லாத பாலியல் துன்புறுத்தலுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறையும் 20,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.
இந்நிலையில், டிசம்பர் 16-ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனக் கூறி நீதிபதி R. கனகேஸ்வரி வழக்கை ஒத்தி வைத்தார்.



