
கங்கார், டிசம்பர் 15 – நவம்பர் 25 ஆம் தேதியன்று நடந்த சாலை விபத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ் கார்பரல் ஒருவர் இன்று கங்கார் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னிலையில் குற்றத்தை மறுத்துள்ளார்.
சம்பவத்தின் போது அவர் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி இளைஞர் ஒருவரின் உயிரிழப்பிற்கு காரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் அவருக்கு 4,000 ரிங்கிட் ஜாமீனை விதித்து வழக்கு முடியும் வரை ஓட்டுநர் உரிமத்தை இடைநிறுத்த உத்தரவிட்டுள்ளது.
அதே விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்ததைத் தொடர்ந்து, கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டிய மற்றொரு குற்றச்சாட்டையும் அவர் மறுத்திருந்தார். அதற்காக நீதிமன்றம் 1,000 ரிங்கிட் ஜாமீனையும் சேர்த்து விதித்துள்ளது.
இந்நிலையில் இந்த இரு வழக்குகளும் அடுத்தாண்டு ஜனவரி 28 ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.



