
கோலாலம்பூர், டிசம்பர்-16 – “நாங்கள் கள் குடிக்கிறோம் என்றால், நீங்கள் கெத்தும் போதை நீரை குடிக்கிறீர்களா?”என ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் K. அர்விந்த், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr அக்மால் சாலேவை காட்டமாக கேட்டுள்ளார்.
அவ்விரு கட்சிகளுக்கும் இடையில் நீடிக்கும் அனல் பறக்கும் வாய் தகராற்றின் அடுத்தக் கட்டமாக, அர்விந்த் அந்த அறிக்கை விட்டுள்ளார்.
இவை அனைத்தும், ஞாயிற்றுக்கிழமை IPF கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி, ம.இ.காவுக்கு ‘அதிகார போதை’ என பேசியதை அடுத்து தொடங்கின.
ம.இ.கா “பகலில் ஒன்றும், இரவில் ஒன்றும் பேசுகிறது” என சாஹிட் சாடியிருந்தார்.
அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, சாஹிட் தான் தேர்தலுக்கு முன் “No DAP, No Anwar” என்று முழக்கமிட்டு, தேர்தலுக்குப் பிறகு அதே DAP மற்றும் அன்வாருடன் முதல் ஆளாகக் கூட்டணி அமைத்தவர் என்று அர்விந்த் சாடினார்.
ஆக அதிகார போதையும், மணிக்கொரு முறை மாற்றி பேசும் குணமும் இருப்பது எங்களுக்கா உங்களுக்கா என அம்னோவை அர்விந்த் விளாசினார்.
இதற்கு பதிலடியாக, அக்மால் சாலே, இன்னும் ஒரு படி மேலே சென்று ம.இ.கா “கள் குடித்து மயக்கத்திலிருப்பதாக” தாக்கினார்.
_”தேசிய முன்னணியிலிருந்து விலகி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணையப் பொதுப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு, இன்னமும் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறீர்களே? அதோடு எதிர்கட்சியில் இணைவோம் ஆனால் அன்வாரை ஆதரிப்போம் என ம.இ.கா கூறுவதெல்லாம் கள் குடித்த போதையில் வெளிவரும் ‘உளறல்'”_ என கிண்டலடித்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத் தான் அரவிந்த், தற்போது கெத்துமைக் குறிப்பிட்டு அக்மாலைத் தாக்கியுள்ளார்.
பெரிய வியாக்கியானம் பேசும் அக்மால், BN எம்.பி.க்கள் மீது விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் நம்பிக்கை பத்திரம், அம்னோவின் இரட்டை நிலைப்பாடு, DAP-யுடன் இணைந்தது போன்றவற்றுக்கு பதில் கூறுவாரா என அர்விந்த் கேள்வி எழுப்பினார்.
“உண்மையில் அதிகார போதை அம்னோ தலைமைக்கே உள்ளது” என்றும் “தலைவன் எவ்வழியே தொண்டனும் அவ்வழியே” என்ற உவமை சாஹிட் – அக்மால் இருவருக்கும் கச்சிதமாக பொருந்தும் என்றும் அர்விந்த் பதிலடி கொடுத்தார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அம்னோ – ம.இ.கா இடையிலான இந்த அறிக்கை மோதல் தற்போதைக்கு முடிவுக்கு வராது என்றே தோன்றுகிறது.
இந்நிலையில், தேசிய முன்னணியில் ம.இ.காவின் எதிர்காலம் குறித்து அதன் மத்திய செயலவை எடுக்கப் போகும் முடிவை நோக்கி அரசியல் பார்வை உள்ளது.



