
புத்ராஜெயா, டிசம்பர் 17-தேசிய பதிவிலாகாவான JPN, MyKad அடையாள அட்டைக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என தெளிவுப்படுத்தியுள்ளது.
இரட்டை குடியுரிமை தொடர்பான நடவடிக்கைகளும் முழுக்க முழுக்க கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் அது கூறியது.
சமூக ஊடகங்களில் பரவியுள்ள தவறான தகவல்களுக்கு விளக்கம் அளிக்கையில் JPN அவ்வாறு கூறியது.
”இறையாண்மையுள்ள நாடு என்ற வகையில் மலேசியா ஒரே குடியுரிமையை மட்டுமே அங்கீகரிக்கிறது; ஒருவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றால், அவர் தன்னார்வ அடிப்படையில் அதை விட வேண்டும்; இல்லையெனில், அரசியலமைப்பின் 24, 25 மற்றும் 26-ஆவது பிரிவுகளின் படி குடியுரிமை நீக்கப்படும்”
என்ற போதிலும், JPN, ஆவணங்களை சரிபார்த்து பரிந்துரைகளை வழங்கும் நிர்வாக அமைப்பாகவே செயல்படுகிறது; இறுதி முடிவு உள்துறை அமைச்சரின் அதிகாரத்தில் உள்ளதாக அது விளக்கியது.
“பரிந்துரையை பரிசீலிக்கும்” என்ற சொல், தானாகவே கொள்கை மாற்றம் அல்லது குடியுரிமை நீக்கம் என பொருளல்ல. ஒவ்வொரு சம்பவமும் கவனமாகவும் நியாயமாகவும் பரிசீலிக்கப்படும்” என JPN வலியுறுத்தியது.



