
ஜோகூர் பாரு, டிச 18 – ஜோகூரில் கம்போங் பாக்கார் பத்து மஜிடியில் (Kampung Bakar Batu Majidee) ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள சுங்கை பாயு புத்ரி ( Sungai Bayu Puteri ) ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் அழுகிய உடலை போலீசார் கண்டுபிடித்தனர்.
நேற்று மாலை மணி 5.58க்கு உடல் சிதைந்த நிலையில் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகக் தென் ஜொகூர் பாரு போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ரவ்ப் செலமாட் ( Raub Selamat ) தெரிவித்தார். அந்த உடலில் BCG தடுப்பூசி போடப்பட்டதற்கான அடையாளங்கள் அல்லது கைரேகைகள் எதுவும் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
சுல்தானா அமினா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட போதிலும் உடலின் மோசமான நிலை காரணமாக மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்க முடியவில்லை.
பெர்மாஸ் ஜெயா, மஜிடி மற்றும் ஜோகூர் ஜெயா உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் இறந்தவரின் உடல் பண்புகளுடன் பொருந்தக்கூடிய காணாமல் போன நபர் குறித்த போலீஸ் புகார் எதனையும் பெறவில்லையென்றும் Raub Selamat கூறினார். எனினும் அந்த உடல் தொடர்பான அடையாளத்தை கண்டறிவதற்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



