
சிரம்பான், டிசம்பர் 22-சிரம்பான் – குவாலா பிலா சாலையில் புக்கிட் புத்துஸ் அருகே பல் மருத்துவர் Dr சிந்துஜா சுப்பிரமணியம் கோர விபத்தில் உயிரிழந்தது, குடும்பத்திற்கும், சுகாதார அமைச்சுக்கும் பெரும் இழப்பாகும்.
நேற்று சிந்துஜாவின் குடும்பத்தாரை நேரில் சென்று கண்டு இரங்கல் தெரிவித்த போது, செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர். அருணாச்சலம் அவ்வாறு கூறினார்.
மேலும், சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிப்ளி அஹ்மாட்டின் அனுதாபத்தையும் குடும்பத்துக்கு தெரிவித்தார்.
குவாலா பிலா துவாங்கு அம்புவான் நாஜிஹா மருத்துவமனையில் பல் மருத்துவம் மற்றும் முக-தாடை அறுவை சிகிச்சை பிரிவில் சிந்துஜா பணியாற்றியவர்.
அவர் சமூக பிரச்னைகளிலும் அக்கறை காட்டியவர்.
சிறார் திருமணத்திற்கு எதிராகவும், கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் செயல்பட்டவர்.
பணியிட வேறுபாட்டால், வாரந்தோறும் சிரம்பானுக்கு பயணம் செய்து கணவரை சந்தித்தார்.
அவ்வகையில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த அந்த கடைசி சந்திப்பு, இன்று குடும்பத்திற்குப் பெரும் நினைவாக உள்ளது.
இந்தச் சம்பவம், சுகாதாரத் துறையில் தம்பதிகள் வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவதால் ஏற்படும் சவால்களை மீண்டும் வெளிப்படுத்துவதை லிங்கேஷ்வரன் சுட்டிக் காட்டினார்.
Dr சிந்துஜாவின் ஆன்மா சாந்தியடையவும், இத்துயரத்தை எதிர்கொள்ள குடும்பத்தினர் தைரியம் பெற பிராத்திப்பதாகவும் அவர் சொன்னார்.
புதன்கிழமை காலை 8 மணியளவில் வேலைக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி 33 வயது சிந்துஜா உயிரிழந்தார்.



