
கோலாலம்பூர், டிசம்பர் 27-வங்காளதேசத்தில் இந்து சிறுபான்மையினரை மக்கள் கூட்டம் கொன்று, உடலை எரித்த கொடூர சம்பவம் குறித்து, மேலவை உறுப்பினர்களான Dr லிங்கேஷ்வரன் ஆர். அருணாச்சலமும் டத்தோ சிவராஜ் சந்திரனும் கடும் கண்டனமும் கவலையும் தெரிவித்துள்ளனர்.
DAP-யைச் சேர்ந்த செனட்டர் லிங்கேஷ்வரன், பாலஸ்தீனுக்கு ஆதரவாக மலேசியா எடுத்த உறுதியான நிலைப்பாடு போல, மற்ற சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கும் அதே நிலைப்பாடு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
வங்காளதேச இந்து ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட கொடூர சம்பவம் மனித உரிமை மீறல் எனக் கண்டித்த அவர், இங்குள்ள வங்காளதேச தூதரகத்திடம் மலேசியா கடும் எதிர்ப்பைப் பதிவுச் செய்ய வேண்டும் என, ஜெலுத்தோங் எம்.பி RSN ராயர் வலியுறுத்திய கோரிக்கையையும் ஆதரித்தார்.
மத அடையாளத்தால் யாரும் தாக்கப்படக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வேளையில், செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன், இந்த சம்பவத்தில் மலேசியா மௌனமாக இருப்பது கவலைக்குரியது எனக் கூறினார்.
வங்காளதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடரும் வன்முறை சட்ட ஒழுங்கை சிதைக்கும் என்றும், வட்டார நிலைத்தன்மையை பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
மனிதநேயம், கண்ணியம், நீதி, உயிர் ஆகியவற்றை பாதுகாப்பதில் மலேசியா தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் அந்த ம.இ.கா செனட்டர் வலியுறுத்தினார்.
வங்காளதேசத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன.
மாணவர் போராட்டத்தை நடத்திய ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் கும்பலால் அடித்து கொல்லப்பட்டு, அவரின் உடல் எரிக்கப்பட்டது.
இந்நிலையில், 29 வயது அம்ரித் மண்டல் என்ற மற்றோர் இந்து ஆடவரும் கும்பல் தாக்குதலில் உயிரிழந்தார்.
இப்படி சிறுபான்மை இந்துக்கள் மீது அந்நாட்டில் நடக்கும் தொடர் தாக்குதல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.



