
ஈப்போ, ஜனவரி 19-2026 ஈப்போ தைப்பூச ஊர்வலத்திற்கு துன் அப்துல் ரசாக் பாலத்தைத் தற்காலிகமாக பயன்படுத்த, ஜனவரி 28 முதல் பிப்ரவரி 2 வரை சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ A. சிவநேசன் மற்றும் ஈப்போ மாநகர மன்றத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக, கடுமையான பாதுகாப்பு நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த அனுமதி கிடைத்துள்ளதாக, புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துள்சி மனோகரன் அறிவித்தார்.
என்றபோதிலும் பாலத்தில் ஒருவழி போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி உண்டு; அதுவும் 3 டன் எடைக்குக் கீழ்பட்ட வாகனங்கள் மட்டுமே பாலத்தைப் பயன்படுத்த முடியும்.
மிக முக்கியமாக, இது தைப்பூச ஊர்வல வாகனங்களுக்கு மட்டுமே… பொது மக்களின் வாகனங்கள் செல்லவோ, அங்கு கடைகளை அமைத்து விபாபாரம் செய்யவோ முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பை எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்ய முடியாது என்பதால், கிடைத்துள்ள இந்த அனுமதியை விவேகமுடன் பயன்படுத்துமாறு துள்சி கேட்டுக் கொண்டார்.
இந்த துன் அப்துல் ரசாக் பாலத்தின் மறுசீரமைப்புப் பணிகள், பாதுகாப்பு காரணங்களால் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பழையப் பாலத்தின் அமைப்பு இனியும் பயன்படுத்தும் நிலையில் இல்லாததால், இத்திட்டம் அவசரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி கொண்டாட்டம், தொடர் மழை மற்றும் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக பணிகள் தாமதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



