
கோலாலம்பூர், ஜனவரி-22-கட்டுமானத் துறையினரின் பணிகளை எளிமையாக்கும்
இனாக்சஸ் மேலாண்மை மென்பொருள்
கட்டுமான துறையினரின் பணிகளை எளிமையாக்கும் வகையில் இனாக்சஸ் மேலாண்மை மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாக வைட்மைண்ட் ஏஐ சொலுஷன் நிறுவனத்தின் தோற்றுநரும் தலைவருமான சிவமணி கூறியுள்ளார்.
தலைநகரில் உள்ள பிரபல தங்கு விடுதியில் நடைபெற்ற கட்டுமானத் துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு இனாக்சஸ் குறித்த விளக்கக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
நடப்பு சூழ்நிலைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட அந்த இனாக்சஸ் மேலாண்மை மென்பொருள் செயற்கை நுண்ணறிவின் வழி நிஜ உலக வணிக சிக்கல்களை புத்திசாலித்தனமாகவும் நெறிமுறையாகவும் தீர்க்கும் திறனை கொண்டுள்ளது.
பினாங்கை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் அறிவார்ந்த ஆட்டோமேஷன், தரவு அறிவியல், இயந்திர கற்றல் மூலம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல தயாராக உள்ள நிறுவனங்களுக்கு தனது சேவையை வழங்கவும் காத்திருக்கிறது.
இந்நிலையில் இனாக்சஸ் மேலாண்மை மென்பொருளை கட்டுமானத் துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்காக அறிமுகம் செய்துள்ள நிலையில், இது ஒருங்கிணைந்த பணி ஆய்வுகள், செயற்கை நுண்ணறிவுகளை கொண்டு திட்டமிடுதல் என அனைத்து பணிகளையும் எளிமையாக்குகிறது எனவும் சிவமணி குறிப்பிட்டார்
இந்த இனாக்சஸ் மேலாண்மை மென்பொருள் குறித்த விளக்கக் கூட்டத்தில் பல்வேறு கட்டுமான நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் வைட்மைண்ட் ஏஐ சொலுஷன் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு அதிகாரி எல்.சிவசுப்ரமணியமும் கலந்து கொண்டனர்.



