
கோலாலாம்பூர், ஜனவரி-26-நாட்டில் ஓய்வூதிய சேமிப்புகள் குறைந்து வருவது குறித்து கவலை அதிகரித்து வருகிறது.
பெரும்பாலான EPF சந்தாத்தாரர்கள், தங்களின் சேமிப்புகளை 55 அல்லது 60 வயதில் ஒரே தடவையாக முழுமையாக எடுத்து விடுகின்றனர்.
ஆனால், அவர்களில் பலர் 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவாகவே ஓய்வூதிய சேமிப்புடன் ஓய்வு பெறுகின்றனர்.
இந்த தொகையானது சில ஆண்டுகளிலேயே கரைந்து விடுகிறது.
இந்த ‘lump sum’ அதாவது சேமிப்பில் உள்ள மொத்தப் பணத்தையும் ஒரேடியாக மீட்கும் கலாச்சாரம், பணி ஓய்வுபெற்றவர்களை உண்மையில் பெரும் ஆபத்துக்கு இட்டுச் செல்வதாக, நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஓய்வுப் பெற்ற பிறகு மாதாந்திர வருமானம் இல்லாததால், பலர் அதிகம் செலவழிக்கிறார்கள் அல்லது தவறான முதலீடுகளில் இறங்கி விடுகின்றனர்.
இதனால் 3 முதல் 5 ஆண்டுகளிலேயே கையில் உள்ள சேமிப்பு முழுவதும் தீர்ந்து விடுகிறது.
போதாக்குறைக்கு மலேசியர்களின் சராசரி ஆயுட்காலமும் தற்போது 76 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.
அப்படியானால், ஒருவரின் ஓய்வூதிய சேமிப்புகள் பல பத்தாண்டுகளுக்கு போதுமான அளவில் இருக்க வேண்டும்.
நிலைமையை மோசமாக்கும் வகையில், வாழ்க்கைச் செலவினமும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
சிங்கப்பூர், ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகள், மாதாந்திர ஓய்வூதிய திட்டங்களை கட்டாயமாக்கி, ஓய்வுபெற்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிலையான வருமானத்தை உறுதிச் செய்கின்றன.
எனவே, மலேசியாவும் ஒரேடியாக இல்லா விட்டாலும், பாதி ‘annuity’ முறையை அறிமுகப்படுத்தி, குறைந்தபட்ச மாதாந்திர வருமானத்தை உறுதிச் செய்ய வேண்டும் என நிதி வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நீண்ட ஆயுட்காலம், அதிக செலவுகள், மற்றும் ஒரே தடவையில் சேமிப்புகளை எடுத்துக்கொள்ளும் பழக்கம்… இவை அனைத்தும் எதிர்காலத்தில் ஓய்வுபெற்றவர்களை வறுமைக்கு தள்ளி விடக்கூடும்.
எனவே, மக்களுக்கு நிலையான மாதாந்திர வருமானம், நிதி விழிப்புணர்வு, மற்றும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.



