சென்னை, ஜனவரி-12 நல்லதோ கெட்டதோ, நாளைய உலகம் AI அதிநவீன தொழில்நுட்பத்தைச் சார்ந்தது.
அதிலிருந்து நாம் முற்றிலும் விலகி வாழ முடியாது என ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கூறியுள்ளார்.
அந்த உண்மையை ஏற்றுக் கொண்டு இன்றைய மாணவர்கள் அதில் அதிக அக்கறையும் அதே சமயம் விழிப்புணர்வையும் கொண்டிருக்க வேண்டும்.
உலகில் எல்லா விஷயங்களையும் போல AI-யாலும் தீங்கு விளையலாம் என்றாலும், அதனை நல்வழியில் பயன்படுத்தினால் மனிதகுலமே ஆக்கப்பூர்வ பலனை அனுபவிக்கும்.
எனவே மாணவச் சமூகம் எதிர்கால சவால்களைச் எதிர்கொள்ள ஏதுவாக இந்த AI தொழில்நுட்ப ஆற்றலை இப்போதே வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றார் அவர்.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணை வேந்தருமான டத்தோ ஸ்ரீ சரவணன், தமிழகத்தின் சென்னையில் ஜெய்பீம் அறக்கட்டளை ஏற்பாடு செய்த கருத்தரங்கில் அவ்வாறு பேசினார்.
தமிழக உயர் கல்வி மாணவர்கள், வெளிநாடுகளில் கல்வி கற்கும் வாய்ப்புகள் பெறுவது தொடர்பில் அக்கருத்தரங்கு நடைபெற்றது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இலங்கை முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டைமான் உள்ளிட்ட பலர் அந்நிகழ்வில் பங்கேற்றனர்.