
சுங்கை சிப்புட், பிப்ரவரி-23 – ம.இ.கா தேசிய உதவி தலைவரும் பேராக் மாநில ம.இ.கா தொடர்புக் குழு தலைவருமான தான் ஸ்ரீ எம். இராமசாமி நேற்று சுங்கை சிப்புட் தொகுதியின் கிளைத் தலைவர்களைச் சந்தித்தார்.
அதன் போது, அடுத்தப் பொதுத் தேர்தலைச் சந்திக்க புதிய வாக்காளர்களை அடையாளம் காண வேண்டிய அவசியம் குறித்து பேசியவர், கல்வியின் முக்கியத்துவதையும் வலியுறுத்தினார்.
குறிப்பாக மார்ச் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள “ஏம்ஸ்ட் நமது தேர்வு” எனும் நிகழ்வினைப் பற்றி அவர் விளக்கம் அளித்தார்.
B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான TVET தொழில்திறன் கல்வி தொடர்பான விளக்கத்தையும் தனதுரையில் குறிப்பிட்டார்.
கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்காக பிரத்தியேகமாக “TAFE” கல்லூரியில் உயர் கல்வியை மேற்கொள்ளும் வாய்ப்பை ம.இ.கா ஏற்படுத்தியுள்ளது.
இக்கல்லுரியில் பயிலும் மாணவர்களுக்கு படித்து முடித்தவுடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன;
மாணவர்களின் வாழ்க்கை மேன்மை அடைய தொழில்திறன் கல்வி வாய்ப்புகளும் வழங்கப்படுவதை தான் ஸ்ரீ இராமசாமி சுட்டிக் காட்டினார்.
இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ம.இ.கா கொடுக்கும் முக்கியத்துவத்தை இத்திட்டங்கள் பறைசாற்றுவதாக அவர் சொன்னார்.