
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற DAP மத்திய செயற்குழு (CEC) தேர்தலில் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, 2,785 அதிகபட்ச வாக்குகளைப் பெற்று, லிம் குவான் எங்கிற்குப் பதிலாக ஜனநாயக செயற்பாட்டுக் கட்சியின் (DAP) தேசியத் தலைவராக பொறுப்பேற்கிறார்.
17 ஆண்டுகள் பொதுச்செயலாளராக பதவியாற்றிய பின்னர் 2022 முதல் கட்சியின் தலைவர் பதவியை வகித்த லிம் குவான் எங்கிற்கு, தற்போது கட்சியின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
DAP-ன் மிகுந்த செல்வாக்குள்ள பொறுப்பான பொதுச் செயலாளர் பதவியை ஆண்டனி லோக் தொடர்ந்து வகிக்கிறார்.
இத்தேர்தலில் பினாங்கு முதல்வர் சொவ் கோன் யாவ் 2,101 வாக்குகள் பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்ட 30 உறுப்பினர்களில் 19ஆவது இடத்தில் இருக்கின்றார்.
மொத்தம் 70 வேட்பாளர்கள் இந்த மத்திய செயற்குழுவின் 30 இடங்களைப் பெறப் போட்டியிட்டனர், இதில் 1,650 கிளைகளில் இருந்து 4,203 பிரதிநிதிகள் வாக்களிக்கும் உரிமைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.