
சிரம்பான், மார்ச்-18 – நடந்து முடிந்த DAP கட்சித் தேர்தல் முடிவுகள், ஒற்றுமை அரசாங்க அமைச்சரவையில் அதன் பிரதிநிதித்துவத்தின் மீது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
DAP-யைச் சேர்ந்த அமைச்சர்களும் துணையமைச்சர்களும் தத்தம் பதவிகளில் தொடருவர்; அவர்களை மாற்றுவதற்கு கோரிக்கை வைக்கப்படாது என்றார் அவர்.
மத்தியச் செயலவைத் தேர்தலானது கட்சியின் உள்விவகாரம்; அதற்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பில்லை.
எனவே, DAP-யைச் சேர்ந்த அமைச்சர்களும் துணையமைச்சர்களும் மத்தியச் செயலவையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தத்தம் அரசாங்கப் பதவிகளில் தொடருவர் என சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோணி லோக் சொன்னார்.
நிதித்துறை துணையமைச்சராக உள்ள லிம் ஹுய் யிங் மத்தியச் செயலவைத் தேர்தலில் தோல்வி கண்ட வேளை, சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை துணையமைச்சராக உள்ள எம்.குலசேகரன் இம்முறை கட்சித் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார்.