
கிள்ளான், ஜூலை-2 – அரசாங்க நிகழ்வுகளுக்கான dj இசைக் கலைஞர்களின் சேவை விலைகளை ஒருமுகப்படுத்த வேண்டுமென, dj-களை உள்ளடக்கிய PUIM எனப்படும் Pertubuhan Usahawan Insipirasi Malaysia அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அவரவர்களுக்கு ஏற்றாட்போல தனித்தனியாக கட்டணங்களை நிர்ணயம் செய்வது வழக்கத்தில் உள்ளது; இது நியாயமான ஒன்றல்ல என அவ்வமைப்பு சுட்டிக் காட்டியது.
அதே சமயம், தைப்பூச நேரத்தில் DJ பாடல்களை இசைக்கும் போது, தொடர்பில்லாத பாடல்களை DJ கலக்கும் கலாச்சாரமும் கண்கூடு.
முக்கியமாக, விடியற்காலை வரையிலும் dj இசைக் கலவை நடக்கிறது; இதனால் வீடமைப்பு பகுதியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளால் தொந்தரவும் அசௌகரியமும் ஏற்படுகிறது.
இது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட்டு, நமது கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிச் செய்வோம் என PUIM கூறியது.
கிள்ளானில் நேற்று அதன் 2-வது ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது மேற்கண்ட விஷயங்கள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.
இவ்வேளையில், பல்வேறு முயற்சிகள் மூலம் உறுப்பினர்கள் மத்தியில் அறிவை மேம்படுத்தவும், தொடர்புடைய அமைப்புகளுடன் ஒத்துழைப்பதன் மூலம் பதிவுச் செய்யப்பட்ட இசைக் கலைஞர்களுக்கான உரிமத்தை எளிதாக்கவும் இந்த PUIM அமைப்பு முனைப்புக் காட்டுகிறது.
அதே சமயம், கூடுதல் நிகழ்வு வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் உறுப்பினர் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பின்னர் அதன் வழி குறிப்பிட்ட தொழில்களுக்குள் வருமானத்தை அதிகரிக்கவும் இணக்கம் காணப்பட்டது
மிக முக்கியமாக, உறுப்பினர்களைத் தொழில்முறைமயமாக்கும் படிப்புகள் மற்றும் கருத்தரங்குகள் வழங்கப்பட வேண்டுமென்றும் கடந்த திங்கட்கிழமை நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இவ்வேளையில், இந்தத் துறையில் உள்ளோர் மத்தியில் ஒற்றுமையை உருவாக்க விரும்புவதே முக்கிய நோக்கம் என PUIM தலைவர் Dj Boy வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
நாட்டில் இந்திய DJ இசைக் கலைஞர்களின் நலன் காக்கும் இயக்கமாக , 2023-ஆம் ஆண்டு இந்த PUIM நிறுவப்பட்ட நிலையில் ஒளி-ஒலி நிறுவனங்கள், லைட்டிங் நிறுவனங்கள், DJ-க்கள் மற்றும் Emcee-கள் உள்ளிட்ட பொழுதுபோக்குத் துறைகளைச் சேர்ந்தவர்கள் அதில் உறுப்பியம் பெற்றுள்ளனர்.