
கோலாலம்பூர், ஜூலை-24- e-hailing நிறுவனங்களான InDrive மற்றும் Maxim தொடர்ந்து மலேசியாவில் சேவையை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஆனால் 3 மாதங்களுக்கு அவை முழு கண்காணிப்பில் வைக்கப்படுமென, APAD எனப்படும் தரை பொது போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த கண்காணிப்பு காலம் நெடுகிலும் ஒவ்வொரு மாதமும் அவ்விரு நிறுவனங்களின் பிரதிநிதிகள் APAD தலைமையகம் வர வேண்டும்.
எத்தனை தடவை வர வேண்டுமென்பது சூழ்நிலைகளைப் பொருத்தது என APAD அறிக்கையொன்றில் கூறியது.
சேவை வழங்கல் நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்யத் தவறினால், 2010 தரை பொது போக்குவரத்து சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் APAD எச்சரித்தது.
EVP எனப்படும் e-hailing வாகனங்களுக்கான பெர்மிட் தேவைகளைப் பின்பற்றாததால், Maxim, InDrive நிறுவனங்களின் வர்த்தக உரிமம் இன்று ஜூலை 24 முதல் இரத்துச் செய்யப்படுமென, கடந்த ஏப்ரல் மாதமே APAD அறிவித்திருந்தது.
இந்நிலையில் 3 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்து, நிர்ணயிக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதிச் செய்து அவ்விரு நிறுவனங்களும் தங்கள் கடப்பாட்டை வெளிப்படுத்தின.
வேலையைத் தொடங்கும் முன் அனைத்து e-hailing ஓட்டுநர்களும் EVP பெர்மிட்டை கொண்டிருக்கும் வகையில் பதிவு முறையை மேம்படுத்தியதும் அவற்றிலடங்கும்.
கூடுதல் அம்சமாக, நிறுவன மற்றும் EVP தரவுகளை APAD-டும் சரி பார்க்கும் வகையில் view only வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து APAD மேற்கொண்ட சரிபார்ப்பில் அவ்விரு நிறுவனங்களின் அனைத்து ஓட்டுநர்களும் EVP பெர்மிட்டைக் கொண்டிருப்பது உறுதிச் செய்யப்பட்டது.
நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதில் இரு நிறுவனங்களின் கடப்பாடும் திருப்தியளிக்கும் வகையிலிருப்பதால், தொடர்ந்து சேவையில் ஈடுபட அவை அனுமதிக்கப்பட்டுள்ளன.