
கலிஃபோர்னியா, செப்டம்பர் -21 – அமெரிக்கா, கலிஃபோர்னியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் மர்மமான முறையில் எகிறிதால் விரக்தியிலிருந்த ஆடவருக்கு, பல ஆண்டுகளுக்குப் பிறகு விடை கிடைத்திருக்கிறது.
2006-ஆம் ஆண்டு முதல் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் Kel Wilson, மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க எத்தனையோ வழிகளைக் கையாண்டு பார்த்துள்ளார்.
ஆனால் எதுவுமே பலன் தரவில்லை; மாதா மாதம் மின் கட்டணம் உயர்ந்தது தான் மிச்சம்.
இதனால், ஒருவேளை மின்கசிவு ஏற்பட்டிருக்கலாமோ அல்லது மின்சாரத் திருட்டு நிகழ்கிறதோ அல்லது மீட்டரில் தான் ஏதோ கோளாறோ என்ற குழப்பம் அவருக்கு.
கடைசியில் மின் விநியோக நிறுவனத்திடமே புகார் கூறி, அவர்களும் சோதனைக்கு வந்த போதே விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
அதாவது இந்த 18 ஆண்டுகளாக Wilson-னின் பக்கத்து வீட்டுக்கும் சேர்த்தே மின்சாரக் கட்டணத்தை அந்நிறுவனம் கணக்கிட்டு வந்துள்ளது.
அதை கேட்டதும் Wilson அதிர்ச்சியில் உறைந்து போனார்.
எனினும் நடந்த தவற்றுக்கு வருத்தம் தெரிவித்த அந்நிறுவனம், அதனை சரி செய்ய, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு உரிய இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.