
கோலாலம்பூர், ஜன 23 – EPL எனப்படும் இங்கிலாந்து Premier League ஆட்டங்களை உணவகங்கள் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் 175,000 ரிங்கிட் இழப்பீடு பெறுவதில் Astro வெற்றி பெற்றது.
Astro Malaysia Holdings Bhd இன் துணை நிறுவனமான Measat Broadcast Network Systems Sdn Bhd அதன் பிரீமியம் உள்ளடக்கம் அனுமதியின்றி ஒளிபரப்பு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
Frenz Pool Café மற்றும் Tuwang 69 Sdn Bhd ஆகியவை இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டங்களை சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஜனவரி 7 ஆம்தேதி மீசாட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததாக Astro தெரிவித்தது.
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதியன்று Astro Supersport 3 வழியாக ஒளிபரப்பப்பட்ட மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) மற்றும் பிரைட்டன் (Brighton) இடையிலான EPL போட்டியின் அங்கீகரிக்கப்படாத பொதுத் திரையிடல் மீது இந்த வழக்கு கவனம் செலுத்தியது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தனது முத்திரைகள் மற்றும் அதன் பிராண்டிங் கூறுகளை அங்கீகரிக்காமல் பயன்படுத்தியதும் இந்த மீறலில் அடங்கும் என்று Astro தெரிவித்துள்ளது.