
ஷா ஆலாம், ஏப்ரல்-21- சிலாங்கூர் அரண்மனையிடமிருந்து ‘Dato’ Seri, Knight Grand Commander of The Most Illustrious Order of the Crown of Selangor (SPMS)’ விருதைப் பெற்றிருப்பதாக facebook வாயிலாக ஓர் ஆடவர் அறிவித்திருப்பது சட்டவிரோதமானது.
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் அதனை உறுதிப்படுத்தினார். சிலாங்கூர் சுல்தான் வழங்கும் அந்த கௌரவப் பட்டம் facebook-கில் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதாக ஷா ஆலாமில் ஒரு போலீஸ் புகார் பெறப்பட்டது.
இதையடுத்து 2017-ஆம் ஆண்டு கௌரவப் பட்டங்கள் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டதாக, டத்தோ ஹுசேய்ன் ஓமார் சொன்னார்.
விசாரித்ததில், சம்பந்தப்பட்ட facebook கணக்கிற்குச் சொந்தக்காரரான ஆடவர், சிலாங்கூர் சுல்தானிடமிருந்து அந்த டத்தோ ஸ்ரீ விருதைத் தாம் பெற்றதாகக் கூறி வருவது தெரிய வந்துள்ளது.
அரண்மனையிடம் சரிபார்த்ததில், அவ்வாடவருக்கு அப்படி எந்தவொரு விருதும் வழங்கப்படவில்லை என உறுதியானது. எனவே, அவ்வாடவராகவே முன் வந்து விசாரணைக்கு உதவ வேண்டுமென டத்தோ ஹுசேய்ன் ஓமார் கேட்டுக் கொண்டார்.
கௌரவ பட்டங்கள் மற்றும் விருதுகள் தொடர்பான மோசடிக் குற்றங்களுக்கு சிறைத் தண்டனைக் காத்திருப்பதையும் அவர் நினைவுப்படுத்தினார்.